ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கிடையே இரண்டு முறை மட்டுமே மனிதாபிமான உதவிகள் காசா சென்றடைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து பணிகளும் தொய்வடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை உறிவினர்கள் மீட்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஜே.சி.பி. போன்ற கனரக வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் இரும்பு கம்பிகளை கொண்டு இடிபாடுகளை நீக்கி வருகிறார்கள். பலர் எந்தவித உதவிப் பொருட்களும் இல்லாதமையால், கைகளால் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உடல்களை வெளியே எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து சில தினங்கள் ஆகியுள்ள இடங்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் சகித்துக் கொண்டு எப்படியாவது உறவினர்களின் உடல்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் பரிதவித்து வருவது வேதனைக்குரியது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.