செங்கடலில் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் நோக்கி கப்பல்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் செயற்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்தின் கேந்திர அமைப்பு காரணமாக மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவை நோக்கி இலகுவாக சென்றடைய முடியும் என துறைமுக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
தென்ஆபிரிக்காவை கடந்து செல்லும் கப்பல்கள் சந்திக்கும் முதலாவது துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பதனால் நெரிசல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் கடந்த ஆண்டை விடவும் அதிகளவு கொள்கலன்கள் கையாளப்படும் என துறைமுக அதிகாரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஹவுதி போராளிகள் அமெரிக்க கப்பல் ஒன்றின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.