இரசாயன உரத்தை தடை செய்வதற்கான தீர்மானத்தின் முழு பொறுப்பினையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவே ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரசாயன உரத் தடை குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தலைவர் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள முன் மற்றவர்களிடம் கலந்தாலோசிக்கலாம். ஆனால், அவர் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் அவரே தான் இறுதியாக பொறுப்பேற்க வேண்டும்.
நான் ஒருமுறை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, பாம் எண்ணெய் உற்பத்தி பற்றிப் பேசினோம். அந்த நேரத்திலேயே, ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியிருந்தது.
உக்ரைன் இந்தியாவிற்கு பாம் எண்ணெயினை வழங்கும் முக்கிய விநியேகஸ்தராகும். உலகின் பாம் எண்ணெய் பயிரிடும் மூன்று சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுவதாக மோடி என்னிடம் கூறினார்.
அவர் 35 ஆண்டுகளில் திரும்பப் பெறும் ஒப்பந்தத்தின் கீழ் பாம் எண்ணெய் பயிரிட முயன்றார்.
ஆனால், சுற்றாடல் காரணங்களுக்காக இலங்கை இவ்வாறான பயிர்ச்செய்கையை நிறுத்தியுள்ளதாக நான் பணிவுடன் மறுத்தேன். மோடி அதை எதிர்க்கவில்லை. மாறாக சூரியகாந்தி உற்பத்தி என தலைப்பை மாற்றினார்.
முடிவெடுப்பதற்கு முன், நான் தலைமைக்கு ஆலோசனை கூற முடியும். அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டால், அதற்கு முழுப் பொறுப்பையும் தலைவர் ஏற்க வேண்டும் என்றார்.
எனவே, இதனையே நான் முன்னாள் ஜனாதிபதிக்கும் கூறுகின்றேன். என அறிவுறுத்தியுள்ளார்.