NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு மூதூர் நீதிமன்றம் தடை விதிப்பு!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கி பரிமாறும் நிகழ்வை இடையே நுழைந்த சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதோடு கஞ்சி நிகழ்வை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியுள்ளனர். 

முன்னதாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இந்த பகுதியில் இடம்பெறவுள்ளதனை அறிந்துகொண்ட பொலிஸார் மூதூர் நீதவான் நீதிமன்றை நாடி நினைவேந்தல் நிகழ்வுகள் உள்ளிட்ட தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் போராட்டங்களில் பங்கெடுக்கும் செயற்பாட்டாளர்களான சம்பூர் பகுதியினை சேர்ந்த நான்குபேர் உள்ளிட்ட ஏனையோருக்கு எதிராக தடையுத்தரவை பெற்று சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் புலனாய்வாளர்கள் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளதோடு புகைப்படம் எடுத்தும் அச்சுறுத்தல் விடுத்ததோடு தடையுத்தரவையும் வழங்க முற்பட்டுள்ளனர். 

குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை 106(1) பிரிவின் பிரகாரம் வழக்கு இலக்கம்-A 12 211/24 வழக்கின் முறைப்பாட்டாளரான சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வேண்டப்பட்ட வேண்டுகோளை கவனத்தில் கொண்டு மூதூர் நீதிமன்றால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கும் தடையுத்தரவு வழங்கப்டுள்ளது. 

 அந்த நீதிமன்ற கட்டளையில் சம்பூர் பொலிஸ் பிரிவில் சட்ட ரீதியாக பிரயோசமடைய கூடிய பொது இடங்களான பாடசாலை கோயில் போன்ற பொது இடங்களில் வெள்ளி முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை ஞாபகார்த்தமூட்டும் எண்ணத்துடன் அதற்காக செயல்படுத்தல் சட்டவிரோதமான மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடிய வகையில் மக்களை ஒன்று கூட்டுதல், வாகன ஊர்வலம் மற்றும் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வகையில் பொது இடத்தில் ஒன்று கூட்டல் என்பன மக்களின் சுகாதாரத்துக்கு இடையூறான வகையில் ஏதாவது தொற்று நோய் ஏற்படக்கூடிய வகையில் உணவு உபகரணங்கள் அல்லது கஞ்சி, ஏதாவது குடிபானம் வழங்குவதற்காக மக்களை ஒன்று கூட்டுதல் அல்லது சுகாதாரம் மற்றும் மக்கள் உயிர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த விதமான செயற்பாடுகளையும் செய்யாமல் இருப்பதற்கு,

 01. கந்தையா காண்டீபன் அல்லது பம்பரசன் -வீரமா நகர் பாட்டாளிபுரம் (மாவீரர் சங்கத் தலைவர்) 

 02.சாந்தலிங்கம் கோபி ராசா அல்லது கோபி சேனையூர்6 சம்பூர் ( மாவீரர் சாங்க உப தலைவர்) 

 03.நவரத்ன ராசா ஹரிஹர குமார் அல்லது கரன் அம்மன் நகர் 2 கட்டைபறிச்சான் தெற்கு (அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பிரதி சபை உறுப்பினர் மூதூர் மாவீரர் சங்க பொருளாளர்) 

 04. செல்வ வினோத் சுஜானி அம்மன் நகர் கட்டைபறிச்சான் தெற்கு (மாவீரர் சங்க செயலாளர்) 

 05.மாவீரர் சங்கத்தின் அங்கத்தவர்கள் 06.வேறு நபர்கள். மேல் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு மற்றும் வேறு நபர்களுக்கு குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை 106(1) பிரிவின் பிரகாரம் கட்டளையிடப்படுகின்றது. 

 மேலும் குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை 106(3) பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த கட்டளையினை மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துகொள்ககின்ற சகல நபர்களுக்கும் பொதுவான கட்டளையாகும். 

 மேலும் இந்த கட்டளையினை இன்றைய தினத்திலிருந்து 14 நாட்களுக்கு உரித்துடையது என அந்த நீதிமன்ற கட்டளையில் தெரிவிக்கக்ப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் திருகோணமலையில் பொலிஸார் மற்றும் இராணுவம் ,புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகளவில் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles