(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியை முன்னின்று நடத்த தயார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் உரிமைத்துவத்தைக் கொண்டுள்ள பாகிஸ்தான் முன்வைத்த விசேட திட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிராகரித்ததை அடுத்தே ஆசிய கிண்ண களத்தில் இலங்கை இறங்கவுள்ளது.
ஆசிய கிரிக்கெட் பேரவை அனுமதிக்குமாயின், 2023க்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கை தயார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டெம்பர் மாதம் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ள போதும், போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலவுகிறது.
மேலும் ஆசிய கிண்ணப் போட்டியை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அஹமதாபாத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.