ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் (07) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் அந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது. அதைத் தொடா்ந்து, மூன்று முறை கடுமையான நிலநடுக்கங்களும், குறைந்த அளவிலான நிலஅதிர்வுகளும் உணரப்பட்டன.
நிலநடுக்கம் மற்றும் அதற்கு பிந்தைய அதிர்வுகளில் சிக்கி சுமார் 300 போ் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சுமார் 2,000 போ் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் அப்துல் வாஹித் நேற்று தெரிவித்தார். ஆறு கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டதாகவும், இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் புதையுண்டுவிட்டதாகவும் அவா் கூறினார்.
ஹெராத் மாகாணத்தின் ஜெண்டா ஜன் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்கள் நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்திருப்பதாக பேரிடா் ஆணைய செய்தித் தொடா்பாளா் முகமது அப்துல்லா தெரிவித்தார். நிலநடுக்கத்தில் சுமார் 600 வீடுகள் இடிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த ஹெராத் மாகாணம், ஈரான் எல்லையையொட்டி உள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் அருகில் உள்ள ஃபரா, பத்கிஸ் மாகாணங்களில் உணரப்பட்டதாக உள்ளூா் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களுக்கு தலிபான் அரசின் துணைப் பிரதமா் அப்துல் கானி பராதா் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூா் அமைப்புகளுக்கு தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
நிலநடுக்க பாதிப்பு பகுதிகளில் உலக சுகாதார அமைப்பும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதி பிராந்தியத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 1000 போ் உயிரிழந்தனா், 1500 போ் காயமடைந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.