இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் நேற்று (18) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் வலுவான மற்றும் நீண்டகால தொடர்புகள் இந்த சந்திப்பின் ஊடாக மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு பங்களிப்பு செலுத்திய GSP + வர்த்தக யோசனைத் திட்டத்திற்கென ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஊழலை ஒழித்தல் மற்றும் முதலீட்டுச் சபை போன்ற நிறுவனங்களை பலப்படுத்துவதன் ஊடாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக்கொள்வது தமது அரசின் நோக்கமென பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.