NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உணவு உற்பத்தியை அதிகரிக்க பிலிப்பைன்ஸில் அதிரடி நடவடிக்கை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டு ஜனாதிபதி பெர்டினண்ட் மார்கோஸ், 5 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார்.

1986 ஆம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியில் மார்கோஸின் தந்தை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ், நாட்டின் நிலப்பரப்பில் 16% அளவிற்கு சுமார் 50 இலட்சம் ஹெக்டேர் நிலங்கள், கிட்டத்தட்ட 30 இலட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 10 இலட்சம் ஹெக்டேர் மறுபகிர்வு செய்யப்பட்ட விவசாய நிலங்களிலிருந்து அரசாங்கத்திற்கு வரவேண்டிய தொகை , செலுத்தப்படாமல் போய்விட்டதாலும், நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பண்ணைத்துறையின் பங்களிப்பு சுருங்கி வருவதாலும், பிலிப்பைன்ஸ் நாட்டின் பாராளுமன்றம் இந்த புதிய சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது. 

சுமார் 35 வருடத்திற்கும் முன்பாக, 1988 நில சீர்திருத்த திட்டத்தின் கீழ், 30 ஆண்டு கால நிலுவைத் திட்டத்தில் நிலங்கள் விவசாயத்திற்காக வழங்கப்பட்டது. 

ஆனால் விவசாயிகளால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. தற்போது பெர்டினண்ட் மார்கோஸ் கையொப்பமிட்டுள்ள ‘புதிய விவசாய விடுதலைச் சட்டம்’ விவசாயிகளின் சொத்துக்கள் தொடர்பான அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

ஜனாதிபதி மாளிகையில் இச்சட்டத்தில் கையெழுத்திடும் விழாவில் அந்நாட்டு ஜனாதிபதி, விவசாய அமைச்சருமான மார்கோஸ் தெரிவிக்கையில்,

இந்தப் பெரிய கடனை செலுத்துவதற்கு இந்த விவசாயிகளுக்கு எந்த வழியும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். எனவே, அரசாங்கம் இதனை ஏற்பதே சரியான செயல். அரசாங்க வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு உணவளிப்பதற்காக நாங்கள் அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். 

இந்த தள்ளுபடியினால் 610,000-க்கும் மேற்பட்ட நில சீர்திருத்த பயனாளிகள் பலனடைவார்கள். அதே சமயம் அரசாங்கத்திற்கு இதனால் ரூ.8600 கோடிக்கும் மேல் (1.04 பில்லியன் டொலர்) செலவாகும். 

குத்தகைதாரர்களுக்கு அளிப்பதற்காக நில உரிமையாளர்களிடம் பெற்ற நிலங்களுக்கு ஈடாக அந்த உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கம் மேலும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக செலவிட வேண்டும். 

நாம் விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். இவ்வாறு மார்கோஸ் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பிலிப்பைன்ஸ் நாட்டில் வெங்காயம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பண்ணை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரிசி இறக்குமதி அதிகரித்ததுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles