நிலவின் தென்துருவத்தின் ஆய்வு பணிகளுக்கான இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பியுள்ள, சந்திரயான் 3 விண்கலத்தின் ஆய்வுகளை இன்று முதல் மீண்டும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் திகதி நிலவின் தென் துருவத்தின் ஆய்வு பணிகளுக்காக சந்திரயான் 3 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கடந்த ஒகஸ்ட் மாதம் 23ஆம் திகதி விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டிருந்தது.
பின்னர் 14 நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், நிலவில் இரவு பொழுது ஆரம்பமானது.
இதனையடுத்து லேண்டர் உறங்கு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில், இன்றைய தினம் நிலவில் பகல் ஆரம்பமாவதன் காரணமாக, உறங்கும் நிலையில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.