NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி – சிம்பாப்வே-நெதர்லாந்து அணிகள் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று சிம்பாப்வேயின் ஹராரே மற்றும் புலவாயோ நகரங்களில் இடம்பெற்று வருகிறது. 

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ‘A’ பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், சிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா அணிகளும், ‘B’ பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் ‘டொப்-3’ இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். 

சுப்பர் சிக்ஸ் மோதல் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதுடன், இந்தியாவில் நடைபெறும் உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெறும்.

தகுதி சுற்றில் ஹராரேயில் நேற்று (24) இடம்பெற்ற 13-வது லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணி, சிம்பாப்வேயை எதிர்கொண்டது. 

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஷாய் ஹோப் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாய்லார்ட் கும்பி, கேப்டன் கிரேக் எர்வின் ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்தனர். ஸ்கோர் 63 ஓட்டங்களை எட்டிய போது ஜாய்லார்ட் 26 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வெஸ்லி மாதேவிர் 2 ஓட்டத்தில், மற்றொரு தொடக்க வீரர் கிரேக் எர்வின் 47 ஓட்டத்திலும் சீன் வில்லியம்ஸ் 23 ஓட்டத்திலும் ஆட்டம் இழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு ரையான் பர்ல், சிகந்தர் ராசாவுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரையால் பர்ல் 50 ஓட்டங்கள், சிகந்தர் ராசா 68 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் விரைவில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். 49.5 ஓவர்களில் சிம்பாப்வே அணி 268 ஓட்டங்கள் ஓல்-அவுட் ஆனது. பிளஸ்சிங் முஜரபானி 11 ஓட்டமும் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், அகீல் ஹூசைன் தலா 2 விக்கெட்டும், கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதனையடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 

44.4 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 233 ஓட்டத்தில் ஓல்-அவுட் ஆனது. இதனால் சிம்பாப்வே அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேயர்ஸ் 56 ஓட்டமும், ரோஸ்டன் சேஸ் 44 ஓட்டமும், நிகோலஸ் பூரன் 34 ஓட்டமும், அணித்தலைவர் ஷாய் ஹோப் 30 ஓட்டமும் சேர்த்தனர். 

சிம்பாப்வே தரப்பில் தென்டை சதரா 3 விக்கெட்டும், பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் நகரவா, சிகந்தர் ராசா தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். சிம்பாப்வே ஓல்-ரவுண்டர் சிகந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார். மற்றொரு லீக் போட்டியில் நேபாளம் நிர்ணயித்த 168 ஓட்டமும் இலக்கை நெதர்லாந்து அணி 27.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

3-வது போட்டியில் விளையாடிய நெதர்லாந்து பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 4-வது போட்டியில் விiயாடிய நேபாளத்துக்கு இது 3-வது தோல்வியாகும். 

‘ஏ’ பிரிவில் தொடர்ச்சியாக 3-வது வெற்றியை சொந்தமாக்கிய சிம்பாப்வே அணி (6 புள்ளி) இன்னும் ஒரு போட்டி மிஞ்சி இருக்கும் நிலையில் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. 

இதேபோல் ஒரு போட்டி எஞ்சி இருக்கும் இருக்கையில் அந்த பிரிவில் இருந்து நெதர்லாந்து (4 புள்ளி), மேற்கிந்திய தீவுகள் (4 புள்ளி) அணிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றை எட்டின. நேபாளம், அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன. 

இன்று இடம்பெறவுள்ள லீக் போட்டிகளில் அயர்லாந்து-இலங்கை மற்றும் ஓமன்-ஸ்காட்லாந்து (பகல் 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles