(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சியில் ஆசனம் பெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகிறது.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் தொடர்பிலான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதாகவும் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ள போதிலும், பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இவ்வாறானதொரு கடுமையான தீர்மானத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம் எடுக்க வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் மாவட்டத் தலைவர்களும் அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
நாமலை எதிர்க்கட்சித் தலைவராக்கும் இறுதித் தீர்மானத்தை எட்டுவது தொடர்பில், சமகால அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலத்திற்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சிக்கு புதிய இளம் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சமகால தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.