NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளைத் தாக்கும் திட்டத்தை முறியடித்தது பிரான்ஸ்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரின் கால்பந்து போட்டிகளில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட செச்சினியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.

பிரான்சின் தென் மாகாணத்தில் உள்ள Saint-Etienne நகரில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் பல கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள Geoffroy-Guichard மைதானத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த இந்த நபர் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பார்வையாளர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தாக்குதல் நடத்தி வீர மரணம் அடைய விரும்பியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இஸ்லாமிக் ஸ்டேட் குழுவின் (IS) குழுவில் ஜிஹாத் மதவாதத்துக்காக வன்முறைச் செயலைச் செய்யத் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் மீது வழக்குத் தொடரவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை, 2024ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் கால்பந்து போட்டிகள் பிரான்ஸ் முழுவதும் உள்ள பல நகரங்களில் நடைபெறவுள்ள நிலையில் இறுதிப் போட்டி பாரிஸில் உள்ள Stade de France மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டிற்கு மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு, பிரான்ஸ் மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்கி வருகிறது.

ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கு விசேட பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டு என உள்துறை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும், இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள், வன்முறை சூழலை உருவாக்கும் சமூக ஆர்வலர்கள், தீவிர வலதுசாரி கும்பல்கள் மற்றும் ரஷ்யாவிலிருந்து அல்லது பிற எதிரிகளின் சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட பல வலுவான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களின் பங்கேற்புடன் பிரான்ஸின் Seineஇல் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறப்பு பாதுகாப்பு கண்காணிப்பு தற்போது மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆற்றங்கரையில் இருக்கக் கூடிய ஏராளமான பார்வையாளர்களுக்கு மத்தியில் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை ஏற்றிச் சென்ற படகுகள் ஆறு கிலோமீட்டர் தூரம் வரையில் Seine ஆற்றில் அணிவகுத்துச் சென்றமை இந்த தொடக்க விழாவிற்கு முன்னில்வாத வகையிலான சிறப்பம்சமாக அமைந்தது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் தாங்க முடியாத அளவுக்கு வலுவாக இருப்பின், ஜூலை மாதம் 26ஆம் திகதி Seine ஆற்றில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடக்க விழா அந்நாட்டின் தேசிய மைதானத்திற்கு மாற்றப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி ஏப்ரல் மாதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles