(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அத்திலாந்திக் சமுத்திரத்தில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட சென்றிருந்த டைட்டான் எனப்படும் சிறிய நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதை தொடர்ந்து, கடலின் அடிப்பகுதியிலிருந்து ‘தட்டும் சத்தம்’ உணரப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சோனார் தொழில்நுட்பம் மூலம் இந்த சத்தம் உணரப்பட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவின் P3 ரக விமானமொன்றின் மூலம் இச்சத்தம் உணரப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை இச்சத்தம் கேட்டதாக, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சத்தம் உணரப்பட்டதை அமெரிக்க கரையோரகக் காவல்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.
6.5 மீற்றர் நீளமான டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அத்திலாந்திக் சமுத்திரத்துக்குள் இறங்க ஆரம்பித்து 2 மணத்தியாலங்களில் அதன் தாய்க்கப்பலுடனான தொடர்பை இழந்தது.
டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த நிலையில் இந்நீர்மூழ்கி காணாமல் போனது. இதில் பாகிஸ்தானின் செல்வந்தர்களில் ஒருவரும், அவரின் 19 வயது மகனும், பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவர் ஆகியோரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.