NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கன மழையால் தத்தளிக்கும் இந்தியாவின் இமாச்சல் பிரதேசம்…!

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் கன மழையின் காரணமாக , வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன் 21 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில்   தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்கள், குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.7000 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலில் பிலாஸ்பூர், சம்பா, ஹமீர்பூர், காங்ரா, குலு, மாண்டி, சிம்லா, சீர்மார், சோலன், உனா, கினார், லாஹால், ஸ்பிதி உள்ள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிறு இரவு) சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தில் இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக சோலன் பிரிவு ஆணையர் மன்மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.

இதேபோல் சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தபோது கோயிலில் 50 பேர் இருந்ததாகத் தெரிகிறது.

சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் கடந்த 24 மணி நேரம் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், இமாச்சலில் இன்று அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 621 சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles