(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த பதினாறு வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான 29 வயதான நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் அவரை கைது செய்து களுத்துறை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வந்த பின்னர், குறித்த பெண் விடுதியின் ஜன்னல் வழியாக குதித்ததாக விசாரணையின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யுவதியை அடையாளம் காண்பதற்கு முன்னர் தாம் அந்த யுவதியை சந்திக்கவில்லை எனவும், அவருடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தாம் உட்பட நால்வரும் குறிப்பிட்ட விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு ஏனைய இருவரும் விடுதியை விட்டு வெளியேறிய பின்னர் தானும் இந்த மாணவியும் அறையில் நிர்வாணமாக இருந்ததாகவும் ஆனால் உடலுறவு எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தொலைபேசியில் வந்த அழைப்புக்கு அவர் கோபமடைந்து ஆபாசமான வார்த்தைகளால் பதிலளித்ததாகவும், பின்னர் அறையின் ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி ஜன்னல் வழியாக குதித்ததாகவும் கூறினார்.
சம்பவத்திற்கு பயந்து அந்த இடத்தை விட்டு ஓடியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் அவளது தொலைபேசி தரவுகள் பரிசோதிக்கப்படவிருந்த நிலையில், விடுதிக்கு சென்றிருந்த உயிரிழந்த மாணவியின் தோழியின் காதலனால் தொலைபேசி களு கங்கையில் வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்த மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.