(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல செயலகப் பிரிவுகளுக்கு, இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேசங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, அஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, அலபாத, கலவான, பெல்மதுல்ல மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.