NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் செலவு அறிக்கையைக் கையளிக்காத வேட்பாளர்களின் தகவல்களை பொலிஸுக்கு அனுப்ப நடவடிக்கை!

கடந்த பொதுத் தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பிலான தகவல் அடங்கிய ஆவணத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்பின்னர், பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8,361 வேட்பாளர்களில் 7,412 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு விபரங்களைக் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் சுயேச்சை குழுக்களாகப் போட்டியிட்ட 197 வேட்பாளர்கள் இன்னும் அந்த அறிக்கையைக் கையளிக்கவில்லை. 

வருமானம் மற்றும் செலவு விபரங்களைக் கையளிப்பதற்கான காலம் கடந்த ஆறாம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெற்றது. 

உரிய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள வேட்பாளர்களின் அறிக்கையின் தகவல்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அது குறித்தும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். 

இதற்கமைய, தேர்தல் ஆணைக்குழு அல்லது பொலிஸிடம் அது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles