தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் ஆலோசனை முன்வைப்பதற்காக 09 பேர் அடங்கிய ஆணைக்குழு வொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அக்குழுவின் தலைவராக முன்னாள் நீதியரசர் (ஓய்வு) ஜனாதிபதி சட்டத்தரணி பிரியசாத் ஜெரார்ட் டேப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பீ.ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்களாக சுந்தரம் அருமைநாயகம், சேனாநாயக்க அலிசென்ரி லாகே, ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ஜயந்த அபேசேகர,அஹமட் ரஜித நவீன் கிரிஸ்டோபர், லெப்பே மொஹொமட் சலீம், சாகரிகா தெல்கொட, எஸ்தர் சிறியாணி நிமல்கா பெர்னாண்டோ மற்றும் விதாரணகே தீபானி சமந்த ரொட்ரிகோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,
இந்த வர்த்தமானியினூடாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதி முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் திகதி வரையான காலத்தை குறைத்தல், வாக்கெடுப்பின்போது அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகளுக்கு பதிலாக நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இலத்திரனியல் வாக்குகளை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குதல், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிக்கக் கூடிய வாய்ப்பு, நபரொருவர் இரண்டு வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கும் அவ்வாறு தெரிவு செய்யும் பட்சத்தில் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட இரு சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வாய்ப்பை வழங்குதல், அரசியல் கட்சிகள் ஊடகங்களை பயன்படுத்தும் முறை தொடர்பில் ஊடக விதிமுறைகளை உருவாக்குதல், தேர்தலில் போட்டியிடுபவர்கள் செயற்படும் விதம், அரசியல் கட்சிகளை பதிவு செய்தல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் தொடர்பான சட்டதிட்டங்களை பலப்படுத்துதல் ஆகிய பிரதான விடயங்கள் குறித்து இந்த குழு ஆலோசனை முன்வைக்கும்.