இந்தியா மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து வருவதால் அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது.
இந்நிலையில், அங்குள்ள ஜோராவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, அவரை அருகிலிருந்த அரச மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால், அந்தப் பகுதியின் வீதிகள் வெள்ள நீரினால் மூழ்கியிருந்தமையால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.
இதனால், குறித்த அரச மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவரது கணவர், தனது மனைவியின் நிலை குறித்து தெரிவித்துள்ளார்.
மருத்துவர் அவரது குழுவினருடன் அந்த கிராமத்துக்கு விரைந்துள்ளனர். ஆனால், அவர்களால் ஊருக்குள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்திருந்துள்ளது.
நிலைமையைப் புரிந்துகொண்ட மருத்துவர், ரவீணாவின் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கிராமத்திலிருந்து பயிற்சி பெற்ற மருத்துவச்சியை வீட்டுக்கு வரவழைக்கும்படி கூறினார்.
வீட்டுக்கு வந்த மருத்துவிச்சியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட டொக்டர் அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி பிரசவம் பார்க்கும்படி கூறினார்.
அதன்படியே மருத்துவிச்சி குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து கேட்டுக்கொண்டே இருந்த வைத்தியர், அதற்கு ஏற்றாற்போல் ஆலோசனை கூறினார்.
இறுதியில் குறித்த பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அடுத்தநாள் காலை அவரும் அவரது குழந்தைகளும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் மகளும் நலமுடன் உள்ளனர் என சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.