மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், பி.பீ. ஜயசுந்தர, டபிள்யு. டி. லக்ஷ்மன், ஆட்டிகல உள்ளிட்ட தரப்பினர்களின் குடியுரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், குறித்த நபர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என உயர் நீதிமன்றம் விசேட தீர்ப்பொன்றை அறிவித்துள்ளது.
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு தள்ளிய இந்தத் தரப்பினருக்கு எதிராக ஏன் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மக்களிடம் கேள்வியொன்று எழுந்துள்ளது.
இந்தத் தரப்பினருக்கு இன்னமும் சிவில் உரிமைகளை வழங்குவது தகுதியற்ற விடயம் என்றும் நாட்டில் பெரும்பாலானோர் தற்போது கருதுகின்றனர்.
எனவே, உயர் நீதிமன்றினால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தரப்பினரின் குடியுரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி, இது தொடர்பாக ஜனாதிபதி விசேட ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 220 இலட்சம் மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன, நிதி தொடர்பாக அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கு தான் உள்ளது.
இங்கு எடுக்கப்படும் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே நிதி அமைச்சும் மத்திய வங்கியும் செயற்படும்.
இதற்கு எதிராக எந்தவொரு ஜனாதிபதியோ நிதி அமைச்சோ செயற்பட்டது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸ்ஸாநாயக்க,
மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், உள்ளிட்டவர்கள் தான் பொருளாதார குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் பல கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது இன்னொருவரையும் இதில் சேர்க்க வேண்டும். அவர் தான் அமைச்சர் பந்துல குணவர்த்தன.
ஏனெனில், இவர்தான் பொருளாதாரம் தொடர்பாக இந்த பாராளுமன்றத்தில் அதிக தடவை பேசியுள்ளார்.
எனவே, தனது பெயர் இந்தப்பட்டியலில் இல்லாதமையை நினைத்து பந்துல கவலையடைகிறாரோ என்று தெரியவில்லை.
அத்தோடு, நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உயர்நீதிமன்றின் தீர்ப்போடு இந்தத் தெரிவுக்குழு பயனற்றதாகிவிட்டது.
இதனால், இந்தத் தெரிவுக்குழுவை கலைக்க வேண்டும் என நான் சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.