NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நெடுந்தீவு கொலைச்சம்பவம் – மேலதிக விபரங்கள் வெளியானது!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் நேற்று முன்தினம் பதிவான ஐவரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விபரங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

51 வயதான சந்தேகநபர் ஜேர்மனியில் 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், அவர் அண்மையில் இலங்கைக்கு திரும்பியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பதுடன், அவர் ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் நாடு திரும்பிய போது ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கொலைகள் இடம்பெற்ற தினத்தன்று சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் இருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஐவர் நேற்று முன்தினம் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் பல்வேறு பகுதிகளில் கூரிய பொருட்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 03 தங்கச் சங்கிலிகள், 02 ஜோடி தங்க வளையல்கள், 08 மோதிரங்கள், ஒரு ஜோடி காதணிகள், ஒரு தங்கப் பதக்கம் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதனை தொடரந்து கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles