NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடகி வாணி ஜெயராமின் முதலாம் ஆண்டு நினைவு தினம்!

பாடகி வாணி ஜெயராமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பின்னணி பாடகிகளுள் மிகவும் முக்கியமானவர் பாடகி வாணி ஜெயராம்; இவரது இயற்பெயர் கலைவாணி. 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார் பத்மாவதி தம்பதிக்கு 5 ஆவது மகளாக பிறந்தார் வாணி ஜெயராம். 

இசை பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த வாணிக்கு இசை என்பது தவிர்க்க முடியாத கல்வியாக இருந்தது. அதன் பலன், கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையைக் கற்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சிலோன் வானொலியில் ஒலிப்பரப்பாகும் ஹிந்தி பாடல்களால் ஈர்க்கப்பட்ட வாணிக்கு திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த ஆர்வத்தில் ஒலிப்பரப்பாகும் பாடல்களை கேட்டு கேட்டு, அதனை அப்படியே மறுவடிவம் செய்யும் அளவிற்கு மாறினார். தன்னுடைய 8 ஆவது வயதில் முதன்முறையாக ‘ஆல் இந்தியா ரேடியோ’ வில் தன்னுடைய குரலை பதிவு செய்தார்.

சென்னை ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த வாணி ஜெயராமுக்கு பாரத ஸ்டேக் வங்கியில் வேலை கிடைத்தது. 1969 ஆம் ஆண்டு ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவராய் வந்தவரும், வாணியின் இசை ஆர்வத்தை புரிந்து கொண்டு அவருக்கு துணையாய் நிற்க, உஸ்தாத் அஹ்மத் கானிடம் ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டார்.

இசையின் மீது வாணிக்கு ஆர்வம் அதிகமாக ஒருக்கட்டத்தில் பேங்க் வேலையை உதறிய வாணி அவர்கள் முழு மூச்சாக இசையில் இறங்கி அதில் உள்ள நுணுக்கங்களை கவனமாக கற்றார்.

தீராத ஆர்வம்.. விடாப்பிடியான பயிற்சி.. ஆகிய இரண்டும் ஹிந்தியில் 1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘குட்டி’ என்ற படத்தில் பாடும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத்தந்தது. அதன் படி, வசந்த் தேசாயின் இசையமைப்பில் அந்தப்படத்தில் இடம் பெற்ற ‘போலே ரே பப்பி ஹரா’என்ற பாடலை பாடி இந்திய திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். 

பாடல் எகிடுதகிடு ஹிட்டடிக்க, தவிர்க்க முடியாத பின்னணி பாடகியாக உருவெடுத்தார் வாணி ஜெயராம். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தில் என பல மொழிகளில் பல பாடல்களை பாடி சாதனை படைத்தார்.

தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு வெளியான ‘தீர்க்கசுமங்கலி’ ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘மல்லிகை ௭ன் மன்னன்’ என்ற மதிமயக்கும் பாடலை பாடி அறிமுகமானார். அதன் பின்னர் ‘ஏழு சுவரங்களுக்குள்’ ‘முத்தமிழில் பாடவந்தேன்’ ‘கேள்வியின் நாயகனே’ ‘மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க’‘௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம்’, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது’, ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’‘கவிதை கேளுங்கள் கருவில்’ உள்ளிட்ட பல பாடல்களை பாடி பிரபலமானார். .

வாணி ஜெயராமின் எந்த பாடலை எடுத்தாலும் அதில் இருக்கும் தனிச்சிறப்பு. பாடலில் இழைந்தோடு தெய்வீகத்தன்மை ஆகும். மதங்களை கடந்து பக்திப்பாடல்களை பாடியிருக்கும் வாணி தனியார் கச்சேரிகளிலும் பாடி உலகப்புகழ் பெற்றார்.

இதில் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். 

அவரது அரும்பெரும் சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூசண் விருதை வழங்கி கெளரவித்தது. இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் இவர் 5 தலைமுறைகளாக 10,000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்துறைக்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் அடையாளமாகவும் மாறியிருக்கிறார்.

Share:

Related Articles