மகிழ்ச்சியான உலக நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் முறன்பாடுகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாகவே இலங்கை தொடர்ந்து குறைந்த தரவரிசையில் உள்ளது.
பட்டியல்படுத்தப்பட்ட 149 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் உள்ளது. மாறாக முதல் ஐந்து மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து முறையே இடம்பிடித்துள்ளன.
இலங்கையில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் அரசியல் அமைதியின்மை பரவலான வன்முறை மற்றும் இடப்பெயர்ச்சியை விளைவித்துள்ளன. இதனால் சமூக ஸ்த்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், இலங்கையின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சிகளை எதிர்க்கொண்டிருந்தது.
இதன்விளைவாக கடன் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட சவால்கள், 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனநலப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன.
நாட்டு மக்களின் வருமானத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு காரணமாக வசதியானவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே கணிசமான செல்வப் பிளவு ஏற்படுகிறது.
இது ஏழைகள் மத்தியில் பெரும் அதிருப்தி மனநிலையை உருவாக்கியுள்ளது.
வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தீவிர வானிலை போன்ற இயற்கை பேரிடர்களால் நம் நாடு அடிக்கடி பாதிக்கப்படுகிறது. உதாரணமாக இந்த ஆண்டு, நாடுமுழுவதும் அதிக வெப்பமான காலநிலை நிலவுகின்றது.
மேலும் கடந்த ஆண்டில் மண்சரிவுபோன் பேரழிவுகளால் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டதோடு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, நாட்டு குடிமக்கள் மத்தியில் ஒட்டுமொத்த வாழ்க்கை திருப்தி மற்றும் மகிழ்ச்சி குறைந்துள்ளது.