NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முகமது அலியை பின்பற்றி பதக்கங்களை நதியில் வீசப்போவதாக அறிவித்துள்ள இந்திய வீராங்கனைகள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முஹமது அலியை பின்பற்றி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கங்கை நதியில் தாங்கள் நாட்டுக்காக வென்றெடுத்த பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், அந்நாட்டின் பா.ஜ.க கட்சியின் எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் முறைப்பாட்டை முன்வைத்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி – ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவிக்கும் வகையில், பல வீரர்களும் போராடி வருகின்றனர்.

கடந்த மே 28 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டத்தில், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டுக்காக வென்றெடுத்த பதக்கங்களை கங்கை நதியில் எறிவோம் என மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போராடி வென்ற பதக்கத்தை நதியில் வீசும் சம்பவம் அமெரிக்காவில் கடந்த 1960ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவானான முகமது அலி, 1960ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம் அமெரிக்காவில் இனவெறி நீங்கும் என்றும், மாற்றம் ஏற்படும் என்றும் நம்பினார்.

ஆனால், கறுப்பினத்தவர் என்ற காரணத்திற்காக உணவகத்தில் தனக்கு உணவு பரிமாறகூட பணியாளர்கள் தயக்கம் காட்டியதை உணர்ந்த முகமது அலி, தான் வென்ற தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசினார்.

குத்துச்சண்டை ஜாம்பவானின் இந்த செயலை பின்பற்றியே, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles