NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடமேல் மாகாண மலையகத் தமிழர்கள் நிரந்தர காணியுரிமை கோரி போராட்டம்!

குருநாகல் மாவட்டத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் தமக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 20 பேர்ச் காணி “உறுதிப்பத்திரத்துடன்” வழங்கப்பட வேண்டும் என கோரி குருநாகல் மாவட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மாவத்தகமயைச் சேர்ந்த பல தோட்டங்களைச் சேர்ந்த மலையகத் தமிழர் சமூகத்தினர், ஒக்டோபர் 5ஆம் திகதியான நேற்று, வியாழக்கிழமை மாவத்தகமை, ரம்புக்கன வீதியில் உள்ள பிட்டியகந்த தோட்ட நுழைவாயிலில் போராட்டத்தை முன்னெடுத்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“முகவரி எமது உரிமை”, “20 பேர்ச் காணி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் ஜீவரத்தினம் சுரேஷ் கூறுகையில், மலையகத்தில் உள்ள தமிழர்கள் அரச நிறுவனங்களில் தமிழில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொளவதாக குறிப்பிட்டார்.

கொடிய தொற்றுநோய் காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்த பெருமை மலையகத் தமிழ் சமூகத்திற்கே உரித்தாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு மாகாணத்தில் 11,000க்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் வாழக்கூடிய சூழலில் அவர்களுக்கு 20 பேர்ச் காணியை உறுதிப்பத்திரத்துடன் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையக எழுச்சி நடைபயணம்

200 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழும் மலையகத் தமிழர்கள் இலங்கையின் அர்த்தமுள்ள குடிமக்களாக அங்கீகரிக்குமாறு அரசிடம் 11 கோரிக்கைகளை முன்வைத்து, மலையகத் தமிழர்கள் 2023 ஜூலை 28 அன்று தலைமன்னாரில் விசேட விழாவை நடத்தியதோடு, ஜூலை 29ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் ஓகஸ்ட் 12 ஆம் திகதி மாத்தளையில் நிறைவடைந்தது.

இலங்கையில் மிகப் பெரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களாக மன்னாரம் மாத்தளையும் பதிவாகியுள்ளன.

“எமது வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல். ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல். தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச்சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை.  வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம். வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை. தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து.
அரசாங்க சேவைககளை சமமாக அணுகுவதற்கான வாய்ப்பு.

பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல். வீட்டுப் பணியாளர்களின் முழுமையான பாதுகாப்பு.
மலையகக் கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல். அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு.” ஆகியன மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles