வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேநபரிடம் இருந்து தொலைபேசி ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா சிறைச்சாலை தெரிவித்துள்ளது.
குறித்த தொலைபேசியில், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் அங்கிருந்தவர்களை தாக்கி வீட்டிற்கு தீவைத்துள்ளனர்.
இதன்போது 10 பேர் தீக்காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தம்பதி உயிரிழந்தனர்.முகமூடி அணிந்த குழுவொன்று வீட்டிற்கு தீ வைப்பதும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதுமான சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்தது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தொலைபேசி உரையாடலும் கண்டறியப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பிரதான சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையில் காணப்படுகின்றனர். மேலும் ஒருவர் அனுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேக சந்தேக நபர் தொலைபேசி பாவித்துள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து நேற்று (24) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேக நபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி ஊடாக 3292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலப்படி 35 தடவைகள் அழைப்பு எடுத்து கதைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.