கொழும்பு, கண்டி, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய் வேகமாக பரவிவரும் நிலையினை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர்”சுமத்த சமரவீர” தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பாதகமான வானிலையே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணமாக பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி இந்த மாதத்தில் மட்டும் கடந்த 12 நாட்களில் 2 ,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேலும் இதுவரையில் இவ்வாண்டில் 19 ,724 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு இலங்கை சுகாதார துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.