NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம் – மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் அஞ்சலி

இலங்கையில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் மொழிபேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்று அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கான புதிய ஒன்றியத்தின் நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன. இதற்கமைய ஒன்றியத்தின் தலைவராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் செயலாளராக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவும் பொருளாளராக திருமதி வருணி ( ஜூனியர் தமிழன் பத்திரிகை) தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் ஒன்றியத்தின் பிரதி தலைவர்களாக தில்லையம்பலம் தரணீதரன்( சுயாதீன ஊடகவியலாளர்), கலாவர்சினி கனகரட்ணம் ( சுயாதீன ஊடகவியலாளர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி செயலாளர்களாக மஹேஸ்வரி விஜயனந்தன்( சுயாதீன ஊடகவியலாளர்) , நிர்ஷன் இராமானுஜம் ( சுயாதீன ஊடகவியலாளர் ) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் உதவிப் பொருளாளராக பார்த்தீபன் ( சுயாதீன ஊடகவியலாளர்) தெரிவு செய்யப்பட்டதுடன் ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்தும் கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் கலந்துகொண்ட
நூற்றுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களில் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகள், தொழில் நிரந்தரம், சம்பளம் மற்றும் பதவி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்தனர்.
அத்துடன் செயலாளர் சிவராஜா அங்கு கருத்து தெரிவிக்கையில் “இவ்வமைப்பில் இணைந்துள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் காப்புறுதித் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தலைவர் செந்தில் வேலவர்,
“பிராந்திய ஊடகவியலாளர்கள் என்பவர்கள் ஓர் பத்திரிகையின் அல்லது இலத்திரனியல் ஊடகங்களின் முதுகெழும்பாக உள்ளனர். அவர்கள் பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்கும் போதும் நோய்வாய்ப்படும் போதும் ஊடகவியலாளர்களுக்கு உதவுவதற்கு ஒர் பலமான அமைப்பில்லா மையினால் பலர் கடிதங்களை தனிப்பட்ட ரீதியில் எழுதுகின்றனர். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். வெளிநாட்டு தூதரகங்களை நாடி, நாம் உதவித் திட்டங்களை பெற்றுக் கொடுத்தல் , ஊடக அமைச்சரை சந்தித்தல், கிரிக்கெட் குழு, மகளிர் குழு என பல பிரிவுகளை ஏற்படுத்தி நிதிகளைத்திரட்டி பாதிக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு இவ் அமைப்பின் ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொடுத்து உதவுவதற்காக நாம் பாடுபட வேண்டும்”. என்றார்…

மகளிர் ஊடகவியலாளர்கள் பிரச்சினைகளைக் கண்காணிக்க மகளிர் இணைப்பாளராக மூத்த ஊடகவியலாளர் ஜீவா சதாசிவமும் இதன் போது நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

மேலும், அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் மரணித்த ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஒன்றியத்தின் செயற்பாடுகளை கண்காணித்து ஆலோசனைகளை வழங்க உயர்பீடம் ஒன்றும் இக்கூட்டத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles