NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரியவகை விலங்கினங்களை படகு மூலம் கடத்தியவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் அரியவகை பறவைகள் மற்றும் ஊர்வனங்களை மீன்பிடி இழுவைப் படகு மூலம் கடல் வழியாக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் ஐவர் தென்கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் 34 முதல் 67 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விஷேட தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இழுவை மீன்பிடி படகினை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 13 மலைப்பாம்புகள், உடும்பு ஒன்று, ஆமை ஒன்று மற்றும் மூன்று கிளிகள் என்பன மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது, குறித்த மீன்பிடி இழுவை படகில் பயணித்த ஐவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் எடுத்து வந்த ஊர்வன மற்றும் பறவைகள் என்பனவற்றை பறிமுதல் செய்த கடற்படையினர் சந்தேக நபர்கள் பயணித்த இழுவை மீன்பிடி படகினையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், சட்டவிரோதமாக இழுவை மீன்பிடி படகில் கொண்டு வரப்பட்ட விலங்குகளை பரிசோதித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், குறித்த விலங்குகள் இலங்கைக்கு சொந்தமனவை அல்ல என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விலங்குகள் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது இலங்கை ஊடாக வேறு ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்காக இவ்வாறு கடத்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும், மீன்பிடி படகு மற்றும் பறவைகள் , ஊர்வன என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Share:

Related Articles