மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்று (30) ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்துகின்றன.
இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர், உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் ஆசிய அணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமையவுள்ளது.
1984ஆம் ஆண்டு 3 அணிகள் மட்டுமே விளையாடிய ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 1986ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணி இணைந்தது. அதன்பிறகு 2004ஆம் ஆண்டு ஹொங்கொங், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் இணைந்து 6 அணிகள் விளையாடியது.
இந்நிலையில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளோடு நேபாளம் அணியும் இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரில் களமிறங்கியுள்ளது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை எடுத்துக் கொண்டால், 1984ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 முறை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் இந்தியா 7 தடவைகளும் இலங்கை 6 தடவைகளும் பாகிஸ்தான் இரண்டு தடவைகளும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. நடப்பு சம்பியனாக இலங்கை அணி உள்ளது.
இந்நிலையில், ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பம், சம்பியன் பட்டம் வென்ற அணிகள்இ அதிக ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் யார்? உள்ளிட்ட விபரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ஆசிய நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்து நோக்கில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1983ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் பேரவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 1984ஆம் ஆண்டு அங்குரார்ப்பண ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் மட்டுமே பங்கேற்றது.
Round Robin முறையில் நடத்தப்பட்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றியீட்டிய இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் ICC இன் அங்கத்துவத்தைப் பெற்று புதிய உறுப்பினராக இந்த தொடரில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தானுக்க எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தையும் பிடித்தது.
ஒருநாள் மற்றும் T20 தொடர்கள்
1983ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டித் தொடராக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், T20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு 2016ஆம் ஆண்டு முதல் T20 தொடராகவும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2016இல் பங்களாதேஷிலும், 2022இல் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் T20 வடிவத்தில் ஆசியக் கிண்ணம் நடைபெற்றது.
இதுவரை வென்ற அணிகள்
1983ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டித் தொடராக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், T20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு 2016ஆம் ஆண்டு முதல் T20 தொடராகவும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2016இல் பங்களாதேஷிலும், 2022இல் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் T20 வடிவத்தில் ஆசியக் கிண்ணம் நடைபெற்றது.
ஆசியக் கிண்ணத் தொடர் இதுவரை 15 தடவைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா 6 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு T20 தொடரில் சம்பியன் பட்டம் வென்று 7 வெற்றிகளுடன் அதிகமுறை சம்பியன் பட்டத்தை வென்ற அணிகள் பட்டியலில முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இலங்கை அணி 6 (5 ஒருநாள் 1 T20) தடவைகள் சம்பியன் பட்டம் வென்று 2ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2 தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆசியக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு அதிக தடவைகள் தெரிவாகிய அணியாக இலங்கை முதலிடத்தில் உள்ளது. 10 தடவைகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இலங்கை 6 தடவைகள் தோல்வியை சந்தித்துள்ளது.
அதன் பிறகு இந்தியா (9), பாகிஸ்தான் (4), பங்களாதேஷ (3) ஆகிய அணிகள் உள்ளன. முதல் இரண்டு ஆசியக் கிண்ணத் தொடர்களில் 3 அணிகள் மட்டுமே கலந்து கொண்டதால் அந்த 2 தொடர்களிலும் இறுதிப் போட்டிகள் நடத்தப்படவில்லை. புள்ளிப் பட்டியல் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்த அணிக்கு சம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. 2ஆவது ஆசியக் கிண்ணம் 1986இல் இலங்கையில் நடைபெற்றதுடன், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
3ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் 1988இல் பங்களாதேஷில் நடைபெற்றதுடன், 4 அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சம்பியனாக மாறியது.