(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு 10 நாட்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்துக்கும் மணிப்பூரின் தற்போதைய நிலைமைக்கும் இந்தியப் பிரதமர் பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை இந்திய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ளன.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இனப்பிரச்சினை காரணமாக 130 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அண்மையில், இரண்டு பெண்களை நிர்வாணமாக பயணிக்க வைத்து காணொளி வெளியிட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானம்’ என இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து இந்திய பிரதமர் மோடி விரைவில் இந்திய பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவார் என்று இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
எனினும், பிரதமர் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதால், பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும், பாரத் ராஷ்டிரா கட்சியும் முடிவு செய்துள்ளன.
இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவையான லோக் சபாவால் மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும், அதற்கு குறைந்தபட்சம் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும்.
பின்னர் இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து பத்து நாட்களுக்குள் வாக்கெடுப்புக்கான திகதியை வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை தாண்டி, பிரதமர் மோடிக்கு 543 கட்சி உறுப்பினர்கள் இருப்பதால், இந்த முறையில் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் பெரிய சிக்கல்கள் இல்லை என தற்போதைய இந்திய அரசாங்கம் கருதுகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இந்திய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அதற்கு ஆதரவாக 126 வாக்குகளும் எதிராக 325 வாக்குகளும் கிடைத்ததால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு 199 வாக்குகள் பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.