(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் தொழில்முனைவோர் தற்போது அழகுக்காகப் பயிரிடப்படும் நீர்ப்பிரம்மி எனப்படும் ஊதாப்பூ, வணிகப் பயிர்ச்செய்கையின் மூலம் பெருமளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டி வருவதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை அறிவித்துள்ளது.
நாட்டில் விளையும் இந்த பூக்களின் இயற்கையான அடர் நீலம் காரணமாக, பல வெளிநாடுகளில் இருந்து கேள்வி உருவாகியுள்ளது. எனவே இந்த மலர்கள் தற்போது போலந்து, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கூற்றுப்படி, இந்த மலர் இயற்கையான வண்ணம், சுவை மற்றும் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது மற்றும் இவை தூள் மற்றும் துண்டுகளாகவும் உலர்த்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த மலர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியைப் பெறமுடிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் தினமும் சுமார் 350 கிலோ பூக்களை உற்பத்திக்காக விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்கின்றனர்.
10 கிலோ பூக்களை நீரேற்றம் செய்வதன் மூலம் ஒரு கிலோ உலர்ந்த பூக்களை பெறலாம். எனவே, உலர்ந்த பூக்கள் உற்பத்திக்கு அதிக அளவு மூல பூக்கள் தேவைப்படுகின்றன. எனவே, ஆண்டுக்கு 2000 கிலோ மலர்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் தற்போது இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களில் 90 சதவீதம் பேர் பெண்களாகவும், இந்த வணிகத்திற்கான வழிகாட்டுதல்கள் ஏற்றுமதி மேம்பாட்டு சபையிடம் இருந்து கிடைப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.