33ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26 ஆம் திகதி முதல் ஒகஸ்டு 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் தீபம் தொடக்க விழாவின் போது போட்டி இடம்பெறும் மைதானத்தில் உள்ள பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது முக்கிய நிகழ்வாகும்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம், ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி ஏற்றப்படுகிறது.
கிரீஸ் நாட்டில் 9 நாட்கள் பயணிக்கும் ஒலிம்பிக் தீபம் ஏதென்ஸ் சென்று அங்கிருந்து பெலோம் என்ற கப்பல் மூலம் பிரான்சின் மார்செய்ல் துறைமுகத்துக்கு மே 8 ஆம் திகதி சென்றடைகின்றது.
ஒலிம்பிக் தீபம் பயணிக்கும் விவரத்தை அறிவித்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு தலைவர் டோனி எஸ்டான்குவெட் இது குறித்து தெரிவிக்கையில்,
‘2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் 16 ஆம் திகதி ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபம் மே 8 ஆம் திகதி பிரான்ஸ் வருகிறது.
பிரான்ஸ் நாட்டின் புரதான இடங்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட நகரங்களில் 68 நாட்கள் ஒலிம்பிக் தீபம் பயணிக்கிறது.
அத்துடன் வெளிநாடுகளுக்கும் எடுத்து செல்லப்படும். ஒலிம்பிக் தீபத்தை எடுத்து செல்லும் நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.