NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் மெக்!

அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான அணித்தலைவராக வலம் வந்த மெக் லானிங் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

31 வயதான அவர், அவுஸ்திரேலிய அணிக்க்காக 182 சர்வதேச போட்டிகளில் அணித்தலைவராக செயல்பட்டுள்ளார்.  

2010 ஆம் ஆண்டு தனது 18 வயதில் அவுஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் ஆன மெக் லானிங் 13 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்று ஓய்வு அறிவித்துள்ளார்.

2014ல் அவுஸ்திரேலியாவை முதன்முதலில் வழிநடத்திய லானிங், பெண்கள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வருகிறார். 

78 ஒருநாள் போட்டிகளில் 69 வெற்றிகள், 100 T20 போட்டிகளில் 76 வெற்றிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி என அவுஸ்திரேலியாவை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். மேலும் அவர் தனது கேப்டன்ஷிப்பில் அவுஸ்திரேலிய அணிக்கு நான்கு T20 உலக கிண்ணங்கள், ஒரு 50 ஓவர் உலக கிண்ணம் மற்றும் கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.

ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவது என்பது கடினமான முடிவு. ஆனால் இப்போதுதான் எனக்கு சரியான நேரம் என்று உணர்கிறேன். 13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவித்த நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி. அதனால் ஓய்வு பெற இப்போது சரியான நேரம் என்று எனக்குத் தெரியும். என்னால் சாதிக்க முடிந்ததைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ‘நான் விரும்பும் விளையாட்டை விளையாட அனுமதித்த எனது குடும்பத்தினர், எனது அணியினர், கிரிக்கெட் அவுஸ்திரேலியா மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 

Share:

Related Articles