(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டில் கடந்த 7 வருடங்களில் 587 வகையான தரமற்ற மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (24 ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 2017இல் 93 வகை மருந்துகளும், 2018இல் 85 வகையான மருந்துகளும், 2019இல் 96 வகையான மருந்துகளும், 2020ல் 77 வகையான மருந்துகளும், 2021இல் 85 வகையான மருந்துகளும், 2022இல் 86 வகையான மருந்துகளும், 2023இல் 65 வகையான மருந்துகளும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளும், பதிவு செய்யப்பட்ட இறக்குமதி செய்யும் மருந்துகளும் தரமற்றவை என பரிசோதனையில் தெரியவந்தால் அவை நீக்கபப்படவுள்ளன.
இந்தியக் கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 278 வகையான மருந்துகளில் ஒரு மருந்து மட்டுமே தரமற்றது என கண்டறியப்பட்டுள்ளது. அவசரகால கொள்முதலின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட 308 வகையான மருந்துகளில் ஒரு மருந்து மட்டுமே தரமற்றது எனக் கண்டறியப்பட்டது.
பரிசோதனை செய்வதன் மூலம் இதுபோன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். அத்துடன், மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் போது முறையான கலஞ்சிய வசதி இல்லாத நிலையில், மருந்து தரமற்றதாக மாறும் நிலை ஏற்படும் என்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.