NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குருந்தூர்மலை விவசாய நிலங்கள் விடுவிக்கப்படுவது தாமதமாகும் அறிகுறி!

தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு குளத்தின் நீரினால் விவசாயம் செய்யும் தமிழ் விவசாயிகளின் நிலங்கள் உள்ளிட்ட காணிகள் விடுவிப்பது மேலும் தாமதமாகும் என தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது இந்த காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. இதற்கு மீண்டும் ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என அங்கிருந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இதனை ஜனாதிபதியிடம் இதுத் தொடர்பில் தெரிவித்து, எமது மக்களின் காணிகளை விடுவிக்க முயற்சிப்போம்.  இது உடனடியாக நடக்குமா என்பது சந்தேகமே.”

முல்லைத்தீவு, குருந்தூர்மலை, தண்ணிமுறிப்பு குளத்தின் நீரைக் கொண்டு விவசாயம் செய்யும் தமிழ் விவசாயிகளின் வயல் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்து, இந்த வார ஆரம்பத்தில், அரச அதிகாரிகள், காணி உரிமையாளர்கள், பிரதேசவாசிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றாக அவதானிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 16ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெற்ற காணிப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு, வனஜீவராசிகள், பிரதேச பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேச தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இந்த கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டனர்.

குருந்தூர்மலை தொல்லியல் திணைக்கள பிரதேசத்தை, பல நூறு ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தி, அந்த நிலத்தில் புதிய பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் செயற்பாடு மோதல் சூழ்நிலைக்கு வழிவகுத்தது.

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட, 1933ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி வர்த்தமானியை காட்டி 78 ஏக்கர் நிலப்பரப்பு குருந்தூர்மலைக்கு சொந்தமானது என விளக்கமளித்ததாக கண்காணிப்புப் பயணத்தில் கலந்துகொண்ட உள்ளூர் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்பின்னர், அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின், தொல்லியல் பொருள்கள் இருந்த மேலும், 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்திற்கு சொநதமானது என, தொல்லியல் துறையால், எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அந்த எல்லைக்குட்பட்ட காணியில் 100 வருடங்களுக்கு மேலாக தமது உறவினர்கள் விவசாயம் செய்து வரும் வயல்வெளிகள் உள்ளதாக அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் காணிப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடந்த ஜூன் மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலில், காணி தொடர்பான அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்கவிடம் கடுமையாக உத்தரவிட்டிருந்தார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் விளைநிலங்கள் உட்பட 229 ஏக்கர் காணிகளை அளவீடு செய்ய தொல்பொருள் திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க உத்தரவிட்டுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதியிடம் வெளிப்படுத்திய போது, தான் வழங்கிய உத்தரவை மீளப்பெறுவது ‘பிரச்சினை’ என பேராசிரியர் கூறியிருந்தார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் தண்ணிமுறிப்பில் கடந்த காலங்களில் தமிழ் பௌத்த விகாரை இருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார். தொல்லியல் களமாக இதனைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, ‘வகுப்பு நடத்தி’ வரலாற்றைக் கற்பிக்கவும் முன்வந்தார்.

தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் தனக்கு சொந்தமான நெற்காணி இருப்பதாக தெரிவிக்கும், அரச அதிகாரிகளினால், கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி நடத்தப்பட்ட கள கண்காணிப்புப் பயணத்தில் பங்கேற்ற தமிழ்த் தாய், தமது காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்த போதிலும் இன்னமும் இழுத்தடிப்பதாகத் தெரிவித்தார்.

“வயலின் நடுவில் கற்களை நட்டு விவசாயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. நாங்களும் கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்து இதுபற்றி பேசினோம். அம்மா உங்கள் காணி உங்களுக்கே சொந்தம்.  அதை விடுவிப்போம். அதுத் தொடர்பில் யோசிக்க வேண்டாம். நீங்கள் போங்கள் என.  இன்று வந்து குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு நாங்கள் என்ன செய்வது?  இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தாருங்கள.”

கண்காணிப்பு விஜயத்தின் போது வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக தொல்பொருள் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் தமது கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் ஆர்.ஜி.ஜயதிலக்க தெரிவித்தார்.

“தொல்பொருட்கள் இருந்தால் தொல்லியல் பிரதேசமாக ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொண்டோம்.  ஆகவே  இந்த பகுதியை பார்க்கும்போது, சில இடங்களில் சிறிய மற்றும் சாதாரண அளவிலான தொல்லியல் பொருட்கள் உள்ளதால், நாங்கள் குறிப்பிட்ட நிலப்பகுதியை, 229 ஏக்கரில் ஒதுக்கியுள்ளோம். ஆனால் இப்போது சரியாகத் தெரியவில்லை, GIS தொழில்நுட்பத்தின் மூலம் இந்த அளவீட்டைச் செய்தோம்.  நிலத்தின் அளவை சரியாகச் சொல்ல முடியாது. இப்போது அவர்களின் கோரிக்கையை எழுத்து மூலமாக வனத்துறை ஊடாக,  எங்களிடம் சமர்ப்பிக்கச் சொன்னோம், ஏனெனில் இந்த காணி முழுவதும் வனப் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமானது. ஆகவே அவர்கள் ஊடாக எங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால், நாங்கள் அதை பரிசீலிப்போம், தேவைப்பட்டால் மீண்டும் எல்லைகள் மற்றும் இந்த பகுதி எந்தெந்த தொல்பொருட்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயந்து, மேலதிகமாக நிலம் இருந்தால், தொல்பொருள் பொருட்கள் இல்லாத பகுதியை,  மீள கையளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது.”

தொல்லியல் திணைக்களம் காணிகளை கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தொல்லியல் திணைக்களத்தின் பிராந்திய உதவிப் பணிப்பாளர் அங்குள்ள ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles