ஜனவரி மாத இறுதிக்குள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிட்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை நிலையம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்று (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தனது உரையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இவரின் வேண்டுகோள் இம்மாத இறுதிக்குள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி திகதி குறித்துள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பாக சகல தரப்புகளும் கலந்துரையாடவுள்ளது.
ஆகையால் இம்மாத இறுதிக்குள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிடைக்கும். இதை ஜனாதிபதி, அவரின் வாயால் மக்களுக்கு தெரியப்படுத்துவார்” என அமைச்சர் தெரிவித்தார்.