(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சைக்கு அவசியமான மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
சிறுநீரகமாற்று சத்திரசிகிச்சைக்கு முன்னதாக நோயாளிக்கு குறிப்பிட்ட வகை மருந்தினை வழங்க வேண்டும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்னர் குறித்த மருந்தை சம்பந்தப்பட்ட நோயாளிக்கு தவறாமல் கொடுக்க வேண்டும் என்றும் அதன் மூலம் மாற்றப்பட்ட சிறுநீரகம் உடனடியாக நிராகரிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் வைத்தியசாலைகளிலும், இந்த மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், இந்த மருந்துக்கு மாற்றீடான மருந்து தனியார் வைத்தியசாலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போத்தல் ஒன்றின் விலை 60,000 ரூபாய் எனவும் நோயாளியின் உடல் எடையின் அடிப்படையில் இந்த மருந்தினை ஏற்றுவதென்றால் 400,000 ரூபாய் வரை செலவாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிறுநீரக நோய்கள் தொடர்பான தேசிய நிறுவகத்தில் சத்திரசிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். வாராந்தம் இரண்டு சத்திரசிகிச்சைகளே இடம்பெறுகின்றன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.