(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சார விநியோகம், பெற்றோலியத் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட துறைகளின் கீழான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரிவு 2இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் மேலும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதுடன் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது விநியோகமும் அவற்றில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளை பராமரித்தல், உணவளித்தல் மற்றும் இணைச் சிகிச்சை ஆகியவற்றிற்காக அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.