நேற்று முன்தினம் அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் 50க்கும் மேற்பட்டவை நேற்று உயிரிழந்ததாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து மேற்கு அவுஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்புத்துறை, திமிங்கலங்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பல்லுயிர் பாதுகாப்புத்துறையின் மேலாளரான பீட்டர் ஹார்ட்லி கூறுகையில், ‘இதுவரை 51 திமிங்கலங்கள் இறந்து விட்டன. இன்னும் 46 திமிங்கலங்கள் உள்ளன. அவற்றை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுவிட்டு, ஆழமான பகுதிகளுக்கு நீந்திச் செல்ல வைப்பது தான் எங்களது நோக்கம். எங்களால் முடிந்தவரை எத்தனை திமிங்கலங்களை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண நிகழ்வுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம் என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.