NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துவாரகாவாக தோன்றிய பெண்ணின் பின்னணியில் மூன்று தரப்பினரின் தலையீடு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் மகள் துவாரகா சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என்ற செய்தியை சிலர் பரப்பிய போதே அதன் நம்பகத்தன்மை பற்றி பலராலும் கேள்வி எழுப்பபட்டது, அதன் ஒரு கட்டமாகவே துவாரகா என்ற நாடகம் மாவீரர் தினத்தன்று அரங்கேற்றப்பட்டதாக மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது ஒரு கேலி கூத்து என்பதை பெரும்பாலான தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டனர். துவாரகா என கூறிக் கொண்டு அப்பெண் வாசித்த அறிக்கை கூட ஒரு கேலிக்கூத்தாகவே இருந்தது. இந்திய சொல்லாடல்களே அந்த அறிக்கையில் காணப்பட்டன.

மாநிலம் என்ற சொல்லாடல் இலங்கையில் பாவிப்பதில்லை. அது இந்திய சொல் வழக்கு. தனது தந்தையின் பெயரை கூட உச்சரிக்க தெரியாத பெண்ணாகவா துவாரகா வளர்ந்தார்.

இந்த நாடகத்தின் பின்னணியில் மூன்று தரப்புக்கள் செயற்பட்டதை அவதானிக்க முடிகிறது. மாவீரர் தினத்தில் துவாரகா உரையாற்றுவார் என்பதை இந்த மூன்று தரப்பும் தெரிவித்து வந்தன.

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவால் புனர்வாழ்வு என்ற பெயரில் பயிற்சி வழங்கப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள்.

இலங்கை புலனாய்வு பிரிவினரின் நெறிப்படுத்தலில் இவர்கள் ஒரு அரசியல் கட்சியாகவும் இப்போது செயற்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ளவர்களின் சிலரின் கருத்துக்கள், இவர்கள் இந்திய றோவின் நெறிப்படுத்தலில் செயல்படுபவர்கள். சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகளின் சொத்துக்களை பதுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் போராட்டம் வெடிக்கும் என மக்களிடம் உண்டியல் குலுக்குபவர்கள். மீண்டும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாக போவதாகவும், விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள் என காட்ட வேண்டிய தேவையும் இந்த மூன்று தரப்புக்கும் உள்ளது.

மக்களை யுத்தகால நெருக்கடிக்குள் வைத்திருப்பதற்கும் வகை தொகை இன்றி தமிழ் மக்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் இதன் மூலமே முடியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா.மனித உரிமை பேரவை, சர்வதேச நாணய நிதியம் ஆகியன இலங்கை அரசாங்கத்தை கோரி வருகின்றன. இலங்கைக்கு கடன் உதவியை வழங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியம் 15 நிபந்தனைகளை விதித்திருந்தது.

Share:

Related Articles