நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஆண்டுதோறும் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் இரண்டாயிரத்து 500 குழந்தைகள் உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஆண்டுதோறும் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதோடு, 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறப்பதாகவும், எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் எனவும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார்.