NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதவி விலகிய நீதிபதியை விமர்சித்த சரத் வீரசேகர MP

முல்லைத்தீவு நீதிபதி மன அழுத்தத்தினால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளார். அவர் ஒரு பைத்தியம்.  அதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.  இதை நான் கூறவில்லை.  நீதிபதியின் மனைவியே கூறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது வாகனத்தை விற்றுள்ளார். அத்துடன் மேற்குலக நாட்டின் இரு தூதுவர்களை சந்தித்துள்ளார்.

எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் என்று நீதிபதி குறிப்பிடுவது முறையற்றது.


முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால் என்னை கைது செய்திருக்கலாம். எனக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு.

குருந்தூர் மலைக்குச் சென்று நான் அந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் என்னை அந்த அரசியல்வாதி எனக்கூறி குறிப்பிட்டுள்ள கருத்து வெறுக்கத்தக்கது.


குருந்துர் மலைக்கு நான் சென்றிருந்த போது அந்த இடத்திற்கு முல்லைத்தீவு நிதிமன்ற நீதிபதி வருகை தந்திருந்தார். அந்த வேளையின் போது வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அவருடன் நன்றாக உரையாடிய நீதிபதியுடன் நான் உரையாட அனுமதி கோரிய போது அதற்கு நீதிபதி அனுமதி வழங்கவில்லை. அதன் பின்னர் நான் அமைதியாக இருந்தேன்.

ஏனெனில் நான் சட்டத்தை மதிக்கத் தெரிந்த ஒரு படைவீரன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள பௌத்தர்களுக்கு வாழ்வதற்கு இடமில்லை. ஆனால் 52 சதவீத தமிழர்கள் தெற்கில் சிங்களவர்களுடன் வாழ்கின்றார்கள். எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

ஆகவே யார் இனவாத நோகத்துடன் செயற்படுகின்றார்கள் என்பதை சிறந்த தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகளளில் 479 இற்கும் அதிகமான மரபுரிமைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.






Share:

Related Articles