NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பின்தங்கியிருக்கும் கூராய் சீது விநாயகர் புரம் கிராமத்திற்கு அதிகாரிகள் விஜயம்!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான கூராய் சீது விநாயகர் புரம் கிராமத்திற்கு மன்னார் மாவட்ட செயலாளர்  க.கனகேஸ்வரன்   நேரடியாக சென்று   பார்வையிட்டு அந்த கிராமத்து மக்களின் தேவைகளை  கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வானது குறித்த கிராமங்களின்  கிராம சேவையாளர் சி.ஸ்ரீஸ்கந்தராஜா  தலைமையில்  நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள்,

தங்கள் கிராமத்தில் உள்ள வீதிகள் மற்றும் குடிநீர் பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் கிராமத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் தூரம் சென்றே மருத்துவம், கல்வி மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

பிரதான வீதிக்கு செல்வதற்கு முன்னதாக உள்ள சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரமான வீதியானது பாரிய குன்றும், குழியுமாக காணப்படுகிறது.

மழை காலங்களில் குறித்த குளக்கட்டு வீதி முற்றிலும் பாவிக்க முடியாதவாறு காணப்படும். இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள் கடித்தால் அல்லது கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படும்  பிரசவ வலி போன்ற அவசர தேவைகளுக்கு இந்த வீதிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

மேலும் இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயத்தையும் தோட்டப் பயிர்ச் செய்கையையும் நம்பி வாழ்பவர்கள். 

அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால்  மிகவும் பாடுபட்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளை இலாபம் எதுவும் இல்லாமல் குறைந்த விலைகளில்  கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்  என தெரிவித்தனர்.

கிராமத்து மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்டச் செயலாளர் அவர்கள்  குழுவினர்களுடன்  பாடசாலை, வீதிகள், குளங்கள், தோட்டக் காணிகள், போன்றவற்றை  பார்வையிட்டு  இவற்றிற்கான தீர்வுகள் விரைவில் பெற்றுத் தருவதாக  தெரிவித்துள்ளார். 

Share:

Related Articles