பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று ஆரம்பிக்கிறது. ஜோகன்ஸ்பெர்க் நகரில் இன்று முதல் ஓகஸ்ட் 24 ஆம் திகதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.
இந்தநிலையில், 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இந்தநிலையில், மாநாட்டில் சீன அதிபா் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்கிறாா். மாநாட்டின் ஒருபகுதியாக அவா்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.
இது தொடா்பாக வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ராவிடம் டெல்லியில் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ”தென்ஆப்பிரிக்க அரசுமுறைப் பயணத்தின்போது பிரதமா் மோடியின் சந்திப்பு நிகழ்வுகள் குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை” என்றாா்.
பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமா் மோடியும் அதிபா் ஜி ஜின்பிங்கும் சந்தித்தால், கிழக்கு லடாக் மோதலுக்குப் பிறகு அவா்களுக்கு இடையேயான முதலாவது சந்திப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.