மகளிர் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் அறிமுக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஆரம்ப விழாவில் பங்கேற்ற நடிகர் ஷாருக் கான் அதிரடியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
ஷாருக் கானை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களான கார்திக் ஆர்யன் சித்தார்த் மல்ஹோத்ரா, டைகர் ஷெராஃப், வருண் தவான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோரும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.
கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி துவங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா – மெக் லானிங் களமிறங்கினர். ஷபாலி வர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மெக் லானிங் உடன் ஆலிஸ் கேப்ஸி ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லானிங் 31 ரன்னில் அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து ஜெமிமா – ஆலிஸ் கேப்ஸி ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆலிஸ் கேப்ஸி 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜெமிமா 42 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அமெலியா கெர், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.