NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் 4600க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் 4600க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல்வேறு போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 25ஆம் திகதி முதல் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுவருகின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்பாய்ச்சல் குளங்களான உன்னிச்சை,நவகிரி,புலுக்குணாவ,உறுகாமம்,கித்துள்,வாகனேரிக்குளம் உட்பட அனைத்து குளங்களினதும் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.


இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைக்கான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்ட நிலையினை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள வவணதீவு,பட்டிப்பளை,போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இயந்திரப்படகு சேவைகள் ஊடாக அத்தியாவசிய போக்குவரத்துப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


இதேபோன்று உன்னிச்சைக்குளம் திறந்துவிடப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.குறிப்பாக மட்டக்களப்பு –கொழும்பு பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன் நகருக்குள் நுழையும் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.


மட்டக்களப்பு நகரில் பிரதான பஸ் நிலையம்,தனியார் பஸ் நிலையம் உட்பட மட்டக்களப்பு வாவியினை அண்டிய பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அதனுடான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி,சந்திவெளி,செங்கலடி உட்பட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சித்தாண்டியில் பிரதான வீதியுடாக வெள்ள நீர்செல்வதனால் அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டு மாற்றுவழிகள் ஊடாக போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 14 பிரதேச செயலகப்பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் சுமார் 4600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 1500 குடும்பங்கள் 30 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


தற்போது மழையுடனான காலநிலை ஓரளவு குறைந்துவரும் நிலையில் நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன.


இதேநேரம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடியோடை பாலம் உள்ள பகுதியில் வெள்ள அனர்த்தம் காரணமாக வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்திருந்தவர்கள் விமானப்படையின் விமானங்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதுடன் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இயந்திரப்படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles