பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் இணைந்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.
பேரணியானது மட்டக்களப்பு, காந்திபூங்கா வரையில் வருகை தந்ததுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய், அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே, மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் கொண்டு வரப்படும் புதிய சட்ட வரைவுகள் மூலம் ஒரு மனிதனின் ஜனநாயக உரிமைகள் முடக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.