(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மணல் ஈ கடிப்பதால் ஏற்படும் தோல் நோயான ‘லீஷ்மேனியாசிஸ்’ எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் பல மாகாணங்களில் பதிவாகி வருவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணரான வைத்தியர் ஜே.எச்.டி.ஜனப்பிரிய தெரிவித்துள்ளார்.
அந்த நோயாளர்கள் பெரும்பாலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், லீஷ்மேனியாசிஸ் என்பது தற்போது இலங்கையில் உள்ள மிகவும் பொதுவான நோயாகும். வட மத்திய மாகாணம், வட மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளன.
அங்கு, நோய் காரணியாக விளங்கும் மணல் ஈ, 2-4 மில்லமீற்றர் நீளமுள்ள வெளிர் பழுப்பு நிற முடிகளுடன் கூடிய மிகச் சிறிய வகை ஈக்கள் ஆகும். மாலை மற்றும் அதிகாலையில் மணல் ஈ மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அந்த காலகட்டத்தில் மக்கள் எதிர்பாராத விதமாக இதன் தாக்கத்திற்கு உள்ளாகுகின்றனர்.
இந்நோய்க்கான முக்கிய அறிகுறிகள் யாதெனில், உடலின் வெளிப்பகுதிகளில் சிவந்த தோல், தோலில் கட்டி, சொறி அல்லது பெரிய புண் என்பனவாகும்.
அநுராதபுரத்தில் உள்ள ஒவ்வொரு கிளினிக்கிற்கும் தினமும் சுமார் 10 புதிய நோயாளிகள் வருகின்றனர். தினமும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என வைத்தியர் ஜே.எச்.டி.ஜனப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.