NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன் – ஆட்டுகொட்டகையில் வைக்கப்பட்ட சடலம்

மாரடைப்பினால் உயிரிழந்த ஒன்பது வயது சிறுவனின் சடலம் புடவையால் மூடப்பட்ட ஆட்டுக் கொட்டகையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சம்பவம் கேகாலை மாவட்டம் மாவனெல்ல, அரநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அரநாயக்க, சமாசர, எலங்கிபிட்டிய கொலனியில் வசித்து வந்த காவிந்த தினேஷ் என்ற ஒன்பது வயது சிறுவன் கடந்த 4ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனுக்கு ஐந்து வயது முதல் இருதய நோய் இருந்ததாகவும், பின்னர் ஒவ்வொரு மாதமும் கிளினிக்கிற்குச் சென்று சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறுவனின் தாயார் ஜீவிகா ஜெயமினி தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த 4ஆம் திகதி மகனின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறுவனின் நிலை மோசமடைந்ததையடுத்து, பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நாளில் இரவு 11 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், 17 நாட்கள் கடந்த போதிலும் சிறுவனின் உடல் பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

சிறுவனின் பிறப்புச் சான்றிதழை வைத்தியசாலையில் சமர்ப்பிக்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நேற்று முன்தினம் (20) சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் தன்னை கைவிட்டு சென்றுவிட்டதாகவும், அதனால் மகன் மற்றும் இரு மகள்களுக்கும் பிறப்பு சான்றிதழ் பெற முடியவில்லை எனவு சிறுவனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லாதது குறித்து பேசிய அவர்,

​​மகன் இறந்து 7 நாட்கள் கழித்து, வீட்டில் மதச் சடங்குகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மதச் சடங்குகள் முடிந்த நிலையில், உடலை மீண்டும் வீட்டுக்குள் எடுத்துச் செல்வது நல்லதல்ல என்ற கருத்து நிலவுவதால், மகனின் சடலம் வீட்டுக்கு வெளியே ஆட்டுக் கொட்டகையில் வைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

கணவன் தன்னை விட்டு பிரிந்த பிறகு பல பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு தான் தாய் வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேசவாசிகள், சிறுவனின் சடலத்தை கிராம சங்க மண்டபத்தில் வைக்க முன்வந்த போதிலும், உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் அதனை விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவனின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles